Sunday, January 8, 2012

நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. …..

இன்று நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ஜானி ஜான் கான் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது. நக்கீரன் அலுவலகம் அதிமுக தொண்டர்களால் காலை 10 மணி முதல் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கான காரணம், நக்கீரன் வெளியிட்ட செய்தி.
அப்படி என்ன செய்தி வெளியிட்டது நக்கீரன்.. … ? அது ஒரு கவர் ஸ்டோரி. “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா. இதுதான் அந்தச் செய்தியின் தலைப்பு. உள்ளே உள்ள கட்டுரையில் அந்தச் செய்தி இதுதான் “ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., “அதைப்பற்றிப் பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம். என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர், ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா ? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.



இதுதான் அந்தச் செய்தி. இந்தச் செய்தி பொய் என்பது மட்டுமல்ல. மிக மிக விஷமத்தனமாகது. அவதூறானது. அயோக்கியத் தனமானது என்பதில் நியாய உணர்வுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நக்கீரன் இன்று நேற்றல்ல… பல காலமாக இப்படித்தான் பத்திரிக்கை நடத்தி வருகிறது. வியாபாரத்திற்காக நக்கீரன் எது வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு நித்யானந்தா விவகாரமே ஒரு சாட்சி. இது மட்டுமல்லாமல் கடந்த ஆறு மாத காலமாக நக்கீரன் பத்திரிக்கையைப் படித்து வருபவர்களுக்கு, அதில் வெளிவரும் பெரும்பாலான செய்திகள், நக்கீரன் அலுவலகத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்து எழுதும் கற்பனைச் செய்திகள் என்பது நன்கு தெரியும்.
ஆனால், இந்த இதழில் ஜெயலலிதா பற்றி வந்துள்ள கற்பனைச் செய்தியானது, அயோக்கியத்தனத்தின் உச்சம். இதை மன்னிக்கவே முடியாது. இப்படி ஒரு செய்தி வெளியிட்டால் தாக்குதல் நடக்கும் என்பது நக்கீரனுக்குத் தெரியாதா ? நிச்சயம் தெரியும். பிறகு ஏன் வெளியிட்டார்கள் ?
நித்யானந்தாவை மிரட்டி பணம் பறித்ததாக கொடுக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டு, பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் காமராஜ் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்பதே காவல்துறை வட்டாரத் தகவல். இப்படிப் பட்ட சூழலில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, அதிமுகவினர் அலுவலகத்தைத் தாக்கினால், நாளை நித்யானந்தா விவகாரத்தில் காமராஜ் கைது செய்யப் பட்டால் கூட, ஜெயலலிதாவுக்கு எதிராக இப்படிப் பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாலேயே காமராஜ் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் வகையில் கைது செய்யப் பட்டுள்ளார் என்று தகிடுதத்தம் செய்யலாம் என்ற திட்டமாகவே இருக்கக் கூடும். வழக்கமாக 10 மணிக்கு அலுவலகத்துக்கு வரும், நக்கீரன் கோபாலும், காமராஜும் இன்று காலை 7 மணிக்கே அலுவலகத்துக்கு வந்து அமர்ந்திருப்பதும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அடுத்த இதழ் நக்கீரனைப் பாருங்களேன். “லைவ் கவரேஜ்…. ஜெ ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆபத்து. நக்கீரன் அலுவலகம் மீது அதிமுக ரவுடிகள் தாக்குதல்” என்று பக்கங்களை நிரப்புவார்கள். திமுக ஆட்சியின் போது, பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்து, பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் குரல்வளையை நெறித்த கருணாநிதி, “அய்யகோ… அம்மையார் ஆட்சியில் அநியாயத்தைப் பாரீர்” என்று ஓலமிடுவார்.
பத்திரிக்கை சுதந்திரம் பரிபோகிறது என்று கூப்பாடு போடும் நக்கீரன், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இதெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகவே நக்கீரன் வேண்டுமென்றே இப்படிப் பட்ட செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும். அந்த வலையில் அதிமுகவினர் வசமாக சிக்கிக் கொண்டனர். இன்று காலை பத்து மணி முதலாகவே சாரி சாரியாக நக்கீரன் அலுவலகத்துக்கு வந்த அதிமுக தொண்டர்கள், கற்களை வீசி நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர். பெரிய இரும்பு கேட் இருந்ததால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. முதலில் ஒரு அணி சென்று கலாட்டா செய்து முடித்ததும், அடுத்த கட்டமாக ஜின்னா என்ற கவுன்சிலர், ஜானி ஜான் கான் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார். அவரோடு வந்த தொண்டர் அடிப்பொடிகள், “கடையை மூட்றா” என்று அனைவரையும் மிரட்டி கடையை அடைக்க வைத்தனர். ஜின்னா மற்றும் அவரது டீம், நக்கீரன் அலுவலகத்தை அடையும் முன்பாகவே, உதவி ஆணையர் செந்தில் குமரன், அவரை வழியிலேயே மடக்கி, சமயோசிதமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
அடுத்தடுத்து வந்த அதிமுக அணியினர், நக்கீரன் அலுவலகம் முன்பாக, நக்கீரன் இதழ்களை கொளுத்துவதும், நக்கீரன் ஆசிரியர் கோபாலை, காது கூசும் அளவுக்கு, கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும், பெரிய பெரிய கற்களை வீசி அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்த முயற்சிப்பதும் என தொடர்ந்து கொண்டே இருந்தது. நான்காவதாக வந்த மகளிர் அணியினர், துடைப்பத்தை நக்கீரன் அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். அதற்கு அடுத்து வந்த மகளிர் அணியினர் ஒரு வாளியில் சாணியைக் கரைத்து ஊற்றினர். அந்த சாணிக் கரைசல், நக்கீரன் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே விழுந்தது. காலை 10 மணி முதல் அந்த இடத்தில் பம்பரம் போல சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த செந்தில்குமரன் மீதும் விழுந்தது.
அடுத்து வந்த அதிமுக அணி சிறிது கடுமையாக வன்முறையில் இறங்கியது. அங்கிருந்த காவலர்களை தாக்கியது. அப்போது பாய்ந்து சென்ற செந்தில்குமரன், கேட்டின் மீது ஏற முயன்ற சில அதிமுக தொண்டர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினார். பிறகு அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சவுக்கு அந்தத் தெருவில் இருந்த மதியம் 3 மணி வரை, போராட்டம் நிற்கவில்லை.
அதிமுகவின் இந்தப் போராட்டங்கள் அரசின் துணையோடும், காவல்துறையின் ஒத்துழைப்போடுமே நடந்துள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைப் பற்றி அவதூறாக எழுதிய நக்கீரன் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த எல்லா உரிமையும் இருக்கிறது. இதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும், நீதிமன்றம் செல்லவும், வழக்கு தொடுக்கவும், எல்லா உரிமையும் உண்டு. அனால், காலை முதல், ஒரு தெருவில் உள்ள எல்லா கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டி, கற்களை வீசி ஒரு அலுவலகத்தைத் தொடர்ந்து தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதிமுக தொண்டர்கள் இது போல போராட்டம் நடத்துவார்கள், அவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அரசின் துணையோடு நடக்கும் இது போன்ற வன்முறைப் போராட்டங்களை இன்று அங்கீகரித்தால், நாளை ஆதாரத்தோடு அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் தாக்கப் படும். ஒரு ஜனநாயகத்தில் ஊடகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பபது மிக மிக முக்கியம்.
திமுகவின் அராஜகங்களால், மனம் வெதும்பிய மக்கள் அளித்த வாக்கில் இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, இது போன்ற வன்முறைகளுக்கு ஆதரவு தருவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த வன்முறைகள் அத்தனைக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும், உள்துறை அமைச்சர் என்ற முறையிலும், ஜெயலலிதாவே பொறுப்பு. நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதாவுக்கு இருக்கும் கோபத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்தக் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு இது வழியல்ல.
அதிமுக தொண்டர்களின் வசவுச் சொற்களையும், சாணிக் கரைசலையும் பொறுத்துக் கொண்டு, தங்கள் பணியைச் செவ்வனே செய்த காவல்துறையினரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்… அரசுப் பணி என்று ஒரு வேலைக்கு வந்ததற்காக இந்த நிலைமையா ? இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா ? காவல்துறையினர் இப்படி அமைதியாக இருந்திருப்பார்களா ?
நக்கீரன் பத்திரிக்கை ஒரு கட்சித் தலைவியைப் பற்றி தவறாக எழுதியதற்கு, ஜானி ஜான் கான் சாலையில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் என்ன பாவம் செய்தார்கள் ? அந்த சாலையில் காலையிலேயே பிரியாணி செய்து விற்பனைக்கு வைத்திருந்தவர்கள், கடையைத் திறக்க முடியாமல், கள்ளத்தனமாக, பாதி ஷட்டரை திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தததைப் பார்க்க முடிந்தது. அதிமுக தொண்டர்களின் போராட்டத்தால், இவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருமானத்தை இழக்க நேரிட்டது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ?
அதிமுக அரசு ஒரு மங்குணி அரசு என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடிந்தாலும், நக்கீரன் விவகாரத்தை இந்த அரசு கையாண்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யையும், புரட்டையும் எழுதி வரும் நக்கீரனின் மென்னியை முறிக்க வழியா இல்லை ? நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா ? காமராஜ் தன் மனைவி ஜெயசுதா பெயரில், வீட்டு மனையை அபகரித்துள்ளார், வீடு வைத்திருக்கும் போது, அதை மறைத்து பொய்யான சான்று அளித்து வீடு வாங்கியுள்ளார் என்று சிபி.சிஐடியிடம் புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகிறதே… அப்போதே காமராஜை கைது செய்திருந்தால், இன்று இப்படி எழுதுவார்களா ?
யாராவது இரண்டு பேர் தொடர்ந்து தும்மினால், “வடசென்னையில் மர்ம தும்மல் பரவுகிறது” என்று செய்தி வெளியிடும் சன் டி.வி, இப்படிப் பட்ட ஒரு மிகப்பெரும் தாக்குதல் நடந்தும், மூச்சே விடவில்லை. சன் டிவியின் மூமூமூத்த செய்தியாளர் ராமசெல்வராஜ் வந்திருந்தும், எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.
இந்த நேரத்தில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். மைலாப்பூர் சரக துணை ஆணையர் எஸ்.பாஸ்கரன் என்பவர்தான் இன்று பணியில் இருந்தார். அவரைப் போன்ற ஒரு மங்குணி அதிகாரியைப் பார்க்கவே முடியாது என்னும் வகையில், கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கென்ன என்று ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், திருவல்லிக்கேணியின் உதவி ஆணையர், செந்தில்குமரன், பம்பரமாக சுழன்று பணியாற்றியதாகட்டும். தடியடியோ பலமோ பிரயோகம் செய்யத் தடை இருந்த நேரத்தில், அந்த ரவுடிக் கூட்டத்தை கையாண்ட விதமாகட்டும், சளைக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாகட்டும். ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ… அப்படி இருந்தார் செந்தில்குமரன். வாழ்த்துக்கள் செந்தில் குமரன் அவர்களே…..


உதவி ஆணையர் செந்தில் குமரன்
நக்கீரன் மீதான தாக்குதல் குறித்து பிரத்யேக ஆல்பம்.

போராட்டம் நடத்த வருகை தரும் அதிமுகவினர்

அதிமுக மகளிர் அணியினர்

கைது செய்யப் படும் அதிமுகவினர்


மங்குணி எஸ்.பி பாஸ்கரன்



கடைகளை மூடச் சொல்லும் கவுன்சிலர் ஜின்னா



காவலரை தாக்கப் பாயும் அதிமுக தொண்டர்






சாணியைக் கழுவும் காவலர்


~

No comments:

Post a Comment