மனைவியிடம் கோபிக்காதீர்கள்
நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.
திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.
திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.
கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.
திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.
இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான
துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.
கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.
ஒரே நிமிடத்தில் புண்ணியம்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
கடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
* ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று
துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா
‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல.
* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்
மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய
திருவடியின் மூலம் தருகிறார். ஆன்மாக்களுக்கு நாம் நன்மையே
செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான
கடவுள் வழிபாடாகும்.
* ஆண்டவன் அகிலாண்ட நாயகன். சர்வ வல்லமையும் உடையவன்.
நம்முடைய தலைவன். மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம்
செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே,
கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க
வேண்டும்.
* கடவுளை நம்மால் காண முடியவில்லை. பாலுக்குள்
இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி
கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால்
தான் இறைவனைக் காண முடியும்.
துன்ப அனுபவம் நன்மைக்காகவே!-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு,
கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம்
கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,
தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.
அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே,
கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில்
துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில்
ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.
ஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே
என்பதைக் காட்டுவதே. மற்றொருவர் கையை விடுத்து நிற்பார்.
அதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை என்பதையே
காட்டுகிறது. இதையே “ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ‘ என்று
வேதம் கூறுகிறது. ண தாய் குழந்தையின் நோய் நீங்க
வேப்பங்கொழுந்து, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து
கொடுப்பாள். அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக
இருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன்
நன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள
முடியாது.
காரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல்,
கடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம்
நன்மைக்காகவே.
No comments:
Post a Comment